மாணவியின் ஆடைகளை கழற்றி சோதனை !



நெஞ்சு பொறுக்குதில்லையே !

சென்னை பெசன்ட் நகர் ஆல்காட்குப்பத்தை சேர்ந்த கனகலிங்கம்-சாந்தி தம்பதியரின் மகள் திவ்யா (21). இவர் அடையாறில் உள்ள ஜானகி எம்.ஜி.ஆர். கல்லூரியில் பி.காம். இறுதியாண்டு படித்து வந்தார். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை திவ்யா வகுப்பில் படிக்கும் ஒரு மாணவி வைத்திருந்த 4 ஆயிரம் ரூபாய் காணாமல் போய் விட்டது. அந்த பணத்தை மாணவிகளுள் யாரோ ஒருவர் திருடி விட்டதாக புகார் கூறப்பட்டது.




இதையடுத்து அந்த வகுப்பில் உள்ள எல்லா மாணவிகளிடமும் பேராசிரியைகள் சோதனை நடத்தினார்கள். ஆனால் யாரிடமும் பணம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மாணவி திவ்யா மீது பேராசிரியைகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது.



எனவே திவ்யாவை மட்டும் தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். திவ்யாவை ஆடைகளை கழற்ற சொல்லி பேராசிரியைகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் அடைந்த திவ்யா கண்ணீர் விட்டு அழுதார். மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பியதும் தாய் சாந்தியிடம் நடந்ததை பற்றி கூறினார். உடனே சாந்தி, இதுபற்றி கல்லூரிக்கு வந்து பேராசிரியைகளிடம் கேட்பதாக கூறினார்.



ஆனால் திவ்யா அதை தடுத்து விட்டார். கல்லூரியில் இறுதியாண்டு படிப்பதால் மார்க்கை குறைத்து விடுவார்கள் என்று கூறி தாயை சமரசம் செய்து விட்டார். தாயை கல்லூரிக்கு வரவேண்டாம் என்று கூறிவிட்ட போதிலும் திவ்யாவின், மனதுக்குள் குமுறல் இருந்து கொண்டே இருந்தது.



தன்மீது திருட்டுப்பட்டம் சுமத்தி அவமானப்படுத்தி விட்டார்களே என்று வேதனைபட்டபடி இருந்தார். இந்த நிலையில் திவ்யாவின் தந்தை கனகலிங்கம் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை சாந்தி அருகில் இருந்து கவனித்து வந்தார். நேற்று மாலை அவர் மருத்துவ மனைக்கு சென்றிருந்தார். திவ்யாவின் சகோதரர்கள் திவாகர், தினேஷ் ஆகியோரும் வெளியில் சென்றிருந்தனர். வீட்டில் தனிமையில் இருந்த மாணவி திவ்யா மனதில் மீண்டும் தன் மீதான திருட்டு பட்டம் புகார் எழுந்தது.



அவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்றிரவு 7 மணி அளவில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கனகலிங்கம் வீட்டில் ஏன் விளக்கு போடவில்லை? என்று வந்து பார்த்தனர். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பது தெரிந்தது. ஜன்னலை திறந்து பார்த்தபோதுதான் திவ்யா தூக்கில் பிணமாக தொங்குவது தெரிந்தது.



அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி சாந்திக்கு தகவல் கொடுத்தனர். அவர் அலறியடித்தப்படி ஓடி வந்தார். பிணமாக தொங்கிய மகள் உடலைப் பார்த்து கதறினார். இதற்கிடையே திவ்யா கடிதம் எழுதி வைத்து இருப்பதை உறவினர்கள் கண்டெடுத்தனர். அந்த கடிதத்தில் திவ்யா, நான் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். என் வகுப்பில் ரூ.4 ஆயிரம் காணாமல் போனதற்காக ஆசிரியர்கள் சோதனையிட்டனர். ஆனால் என்னை மட்டும்...... என்று எழுதி இருந்தார். இதை கண்டதும் உறவினர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். இன்று (புதன்) காலை திவ்யாவின் உறவினர்கள் மற்றும் ஆல்காட் குப்பத்தை சேர்ந்த சுமார் 500 பேர் அடையாறில் உள்ள ஜானகி எம்.ஜி.ஆர். கல்லூரி முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.



காலை 8.15 மணி முதல் 9.15 மணி வரை மறியல் நீடித்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கார்கள் கடற்கரை சாலை வரை நின்றது. போக்குவரத்து பாதிப்பால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் துணை போலீஸ் கமிஷனர்கள் சாரங்கன், பெரியய்யா, உதவி கமிஷனர்கள் ஐசக்பால்ராஜ், நரசிம்மவர்மன் ஆகியோர் சென்று சமரச பேச்சு நடத்தினார்கள். மாணவி திவ்யாவை நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதாக கூறப்படும் 3 பேராசிரியைகளிடம் விசாரணை நடப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் உறுதி கூறினார்கள்.



இதையடுத்து ஆல்காட் குப்பம் மக்கள் கலைந்து சென்றனர். அதன்பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது. மாணவி திவ்யாவின் தாய்மாமா வீரமணி கூறுகையில், தேவையில்லாமல் திவ்யா மீது திருட்டு பட்டம் சுமத்தி விட்டனர். அவளை நிர்வாணப்படுத்தியதால் தற்கொலை செய்து விட்டாள். இனிமேல் எந்த ஒரு மாணவிக்கும் இத்தகைய முடிவு ஏற்படக் கூடாது என்றார்.



மாணவி தற்கொலை பற்றி சாஸ்திரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மாணவி கடிதத்தில் குறிப்பிட்டிருந்த 4 பேராசிரியைகளையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அடையாறு போலீஸ் நிலையத்தில் 4 பேரையும் வைத்து இருந்தனர். இதுபற்றி அறிந்ததும் 30-க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் அடையாறு போலீஸ் நிலையத்துக்கு சென்று முற்றுகையிட்டனர். 4 பேராசிரியைகளை நாங்கள் பார்த்து கேள்வி கேட்க வேண்டும் என்றனர். உடனே துணை கமிஷனர் சாரங்கன் வந்து பேச்சு நடத்தினார்.



மாணவி இறந்தது ஈடு செய்ய முடியாதது. இதில் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றார். அதற்கு பெண்கள் மறுத்து எங்களை கைது செய்யுங்கள் என்று கோஷம் எழுப்பினார்கள். இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மீனவ பெண்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.



பெண்கள் போராட்டம் காரணமாக 4 பேரா சிரியைகளையும் போலீசார் பாதுகாப்பாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். வேன் முன்பும் பெண்கள் மறியல் செய்தனர். அவர்களும் அப்புறப்படுத்தப்பட்டனர். இதேபோல் சாஸ்திரிநகர் போலீஸ் நிலையம் முன்பும் முற்றுகை நடந்தது. மதியம் வரை நடந்த முற்றுகை போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
source:www.thedipaar.com